புதுச்சத்திரம் காவல் நிலையத்தின் சார்பில், கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி அறிமுகக் கூட்டம் புதுச்சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கடலூர் : சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் பேருந்து நிலையத்தில், கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி (Village vigilance police officer) அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக், கிராம காவலர் அறிமுக கூட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா, கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களையும், இளைஞர்களையும் வரவேற்று கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதோடு ஒவ்வொரு பகுதிக்கும் நியமிக்கப்படும் காவலர்களுக்கு, அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வில்லியநல்லூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் மில்டனை அறிமுகம் செய்து வைத்து பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும் சம்பந்தப்பட்ட கிராமத்திலுள்ள பொதுமக்கள், இளைஞர்கள் அந்த காவலருடன் தொடர்பில் இருந்து குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்ற என்று கேட்டுக்கொண்டார்.
கிராமங்களில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்தும், சந்தேகத்திற்கிடமாக நடமாடும் நபர்கள் குறித்தும், சட்டவிரோதமாக நடைபெறும் செயல்கள் குறித்தும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம். கிராமங்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளைப் பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தால் அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும், முன்னேற்பாடுகளை செய்யவும் பொறுப்பு அதிகாரி ஒத்துழைப்பு வழங்குவார்.
உங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட காவலரிடம் நீங்கள் விவாதிக்கலாம், நீங்கள் எந்தத் துறை குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தீர்களோ அந்தத் துறையின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான வசதிகளை சம்பந்தப்பட்ட காவலர் செய்து தருவார். இதனால் கிராமங்களில் குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப் படுவதோடு கிராமப்புறங்கள் மேம்பாடு அடைவதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இறுதியில் மீண்டும் பேசிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா, புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குள் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு காவலருக்கு குறைந்தது 5 அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடிய காவல் துறையினருக்கு, தங்கள் பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படும் காவலருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து குற்றங்களை முன்கூட்டியே தடுக்க உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறினர்.
நிகழ்ச்சியில் துணை காவல் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சிவகுருநாதன், சுப்பிரமணியன், காவலர்கள் முத்துக்குமார் (தனிப் பிரிவு) வெற்றிவேல், திருஞானம், பாலமுருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.