தமிழக மன்னர்களில் பேரரசனாக விளங்கிய இராஜகேசரி இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மனுக்கு உடையாளூர் கிராம மக்களும், சிவபாதசேகரன் சதய விழா குழுவினரும் இணைந்து சதய விழா எடுத்து சிறப்பித்துள்ளனர்.
தரணி ஆண்ட பேரரசன் இராஜராஜனுக்கு தஞ்சையில் விழா எடுப்பது அனைவரும் அறிந்ததே. உடையாளூர் என்கிற பழையாறையில் கடந்த சில வருடங்களாக இராஜராஜ சோழனுக்கு சதயவிழா நடந்து வருகிறது. கடந்த வருட சதயவிழாவின் போது சிவபாதசேகரன் சதய விழா குழுவினரின் முயற்சியால் இராஜராஜனுக்கு பஞ்ச உலோகங்களினால் ஆன ஐம்பொன் சிலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாதம் வளர்பிறை சதய நட்சத்திரத்தில் பிறந்த அருள்மொழி வர்மன், இராஜகேசரி இராஜராஜ சோழன் என்ற பெயரால் பட்டம் சூட்டப்பட்டதும் சதய நட்சத்திர தினத்தில்தான் என்பதால் இராஜராஜ சோழனுக்கு ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சதய நட்சத்திர தினத்தில் சிறப்பான முறையில் சதயவிழா நடத்தி வருகின்றனர்.
உடையாளூர் சதயவிழாவின் முக்கியத்துவம்
சோழர்களின் வரலாறு முழுக்க ஆராயும் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சோழர்களின் தலைநகரம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது புலனாகும். பூம்புகார் தொடங்கி உறையூர், பழயாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் இன்றைய பிச்சாவரம் வரை அந்த பட்டியல் நீளும்.

பிற்கால சோழர்களின் முதல்வன் விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி தனது தலைநகரை தஞ்சை அரண்மனைக்கு மாற்றுவதற்கு முன்னால் பழையாறை என்கிற இன்றைய உடையாளூர் சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. இராஜராஜ சோழன் காலம் வரையிலும் பழையாறைக்கு முக்கியத்துவம் இருந்தது, கீழ் திசை முழுவதும் கட்டியாண்ட மதுராந்தகன் என்கிற கோப்பரகேசரி முதலாம் இராஜேந்திர சோழன் முடிசூட்டு விழாவிற்கு பிறகு பழையாறை அரண்மனைக்கு ஒய்வெடுக்க சென்ற இராஜராஜ சோழன் அங்கேயே மரணமடைந்ததால் பள்ளிப்படை கட்டப்பட்டதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

இராஜராஜ சோழன் பள்ளிப்படை கட்டப்பட்ட அன்றைய “பழையாறை” இன்றைய உடையாளூரில், சோழ வாரிசுகளான ராணி சாந்திதேவி ஆயாள் முன்னிலையில் இளவரசர் மன்னர் மன்னன் தலைமையில் புலிக் கொடி ஏற்றப்பட்டு சதயவிழா தொடங்கியது. காலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் உடையாளூரை சேர்ந்தவர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து சென்றவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கொடியேற்றத்திற்கு பின்பு பள்ளிப்படையில் கணபதி ஹோமம், அஸ்திர ஹோமம், ருத்ர ஹோம் முதலான ஹோமங்கள் நடந்தன, மங்கள் வாத்தியங்கள் முழங்க 108 வலம்புரி சங்குகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு இராஜராஜ சோழனின் சதயவிழா குதூகலமாக கொண்டாடப்பட்டது.