Monday, May 23, 2022
Home ஆன்மீகம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை : அக்னி பிழம்பாய் காட்சியருளிய அருணாச்சலேசுவரர்!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை : அக்னி பிழம்பாய் காட்சியருளிய அருணாச்சலேசுவரர்!

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.

இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து வழிபட்டு நம்முன்னோர் ஆனந்த பரவசம் எய்தினர்.

இவற்றில் ‘தீ’ என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது. சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது.

பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.

வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்

 எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும் அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக தோன்றினார்.

இறைவனின் அருளை வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து விட்டார். பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார்.

இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.

பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.

கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன.

இறைவன் பெயர் – அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்)
இறைவி பெயர் – உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்)
புகழ் பெற்ற விழா – திருகார்த்திகை தீபம்
விழா காலம் – கார்த்திகை மாதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments